லண்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு பிரிட்டன் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிக வீரியம் மிக்க பிரிட்டன் கொரோனா, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி வருகிறது. இதனால், இங்கிலாந்துக்கான விமான சேவையை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகள் தடை விதித்துள்ளன. கடந்த ஒரு மாதமாக பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த பயணிகளை கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில், அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. நவம்பர் 25 முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய 33,000 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இவர்களில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அதில் ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெங்களூருவில் மூன்று பேரும், ஐதராபாத்தில் இருவரும், புனேவில் ஒருவரும் என மொத்தம் ஆறு பேரும், தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும், இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் பணி நடைபெறுதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.