ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 397 ஆக அதிகரித்துள்ளது. வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதுவரை 165 நாடுகளுக்கும் மேல் வைரஸ் பரவியுள்ள நிலையில், 2 லட்சத்து 75 ஆயிரத்து 741 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில், கொரோனாவின் தாயகமான சீனா, கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது. சீனாவில் இதுவரை 80 ஆயிரத்து 967 பேர் பாதிக்கபட்டுள்ளதாகவும், வைரஸ் தாக்கத்திலிருந்து 71 ஆயிரத்து, 150 பேர் குணமடைந்துள்ளதாகவும் 3 ஆயிரத்து 248 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சீனாவுக்கு அடுத்த படியாக கொரோனாவால் இத்தாலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 5 ஆயிரத்து 986 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 47 ஆயிரத்து 21 ஆக அதிகரித்துள்ளது. 5 ஆயிரத்து, 129 பேர் குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் மட்டும் 627 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 4 ஆயிரத்து 32 ஆக அதிகரித்துள்ளது.
ஸ்பெயினில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 433 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 510 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்து 588 பேர் குணமடைந்துள்ள நிலையில், ஆயிரத்து 93 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், ஜெர்மனியில் கொரோனாவால், ஒரே நாளில் 4 ஆயிரத்து 528 பேர் பாதிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 180 பேர் குணமடைந்துள்ள நிலையில், 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரானில் 19 ஆயிரத்து 644 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர். 6 ஆயிரத்து 745 பேர் குணமடைந்துள்ள நிலையில், ஆயிரத்து 433 பேர் பலியாகியுள்ளனர்.
ஈரானுக்கு அடுத்தப்படியாக அமெரிக்காவில், ஒரே நாளில் 5 ஆயிரத்து 586 பேர் பாதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 375 ஆக அதிகரித்துள்ளது. இதில், 147 பேர் குணமடைந்துள்ள நிலையில், 256 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
பிரான்ஸில் 12 ஆயிரத்து 612 பேர் பாதிக்கபட்டுள்ளனர். ஆயிரத்து 587 பேர் நோயின் தாக்கத்திலிருந்து குணமடைந்துள்ளனர். 450 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
தென் கொரியாவில் 8 ஆயிரத்து 652 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 ஆயிரத்து 233 பேர் குணமடைந்துள்ளனர். அந்நாட்டில் இதுவரை 94 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸின் தாக்கம் திடீரென அதிகரித்த ஸ்விட்ஸர்லாந்தில் 5 ஆயிரத்து 407 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் மட்டுமே குணமடைந்துள்ள நிலையில், 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரிட்டனில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 983 ஆக அதிகரித்துள்ளது. 65 குணமடைந்துள்ள நிலையில், 177 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக நாடுகள் எடுத்து வரும் தீவிர நடவடிக்கை காரணமாக வைரஸின் தாக்கத்திலிருந்து மீண்டுள்ளவர்கள் எண்ணிக்கை 90 ஆயிரத்து 943 ஆக அதிகரித்துள்ளது. இருந்த போதிலும் நோயின் தாக்கத்தை உணர்ந்து அனைத்து நாடுகளும் கடும் கட்டுப்பாட்டை விதித்து வருகின்றன. இந்தியாவை பொறுத்த வரை, கொரோனாவால் 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 23 பேர் வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.