ஆஃப்பிரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா!

அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக உலக சுகாதார மையம் ஆய்வு ஒன்றை நடத்தியது.

ஆப்பிரிக்காவில் மொத்தம் 54 நாடுகள் உள்ளன. அதில், எகிப்து, லிபியா, மொராக்கோ, சோமாலியா, சூடான், துனிசியா உள்ளிட்ட 7 நாடுகளை தவிர்த்து எஞ்சிய 47 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வு முடிவுகள் பி.எம்.ஜே குளோபல் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆப்பிரிக்காவில் மிகக்குறைந்த பாதிப்புகளே தற்போது உள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் இந்த பாதிப்பு விகிதம் அதிகரிக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிரிக்காவில் அடுத்த ஓராண்டுக்குள் மொத்த மக்கள் தொகையில் 23 கோடி பேர் அல்லது 22 சதவீதத்தினர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒன்றரை லட்சம் பேர் வரை உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தோராயமாக, 46 லட்சம் பேரை மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டி இருக்கும் எனவும், அவர்களில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் கடுமையான நோய் பாதிப்புக்கு உள்ளாவார்கள் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 88% மக்கள் தங்களுக்கு வைரஸ் தொற்று இருப்பதை அறிய மாட்டார்கள். அவர்களுக்கு லேசான அறிகுறிகள் ஏற்படலாம் அல்லது ஏற்படாமலும் இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், 4 சதவீத மக்களுக்கு கடுமையான அறிகுறிகள் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில் எந்தெந்த நாடுகள் அதிக பாதிப்புகளை சந்திக்கும் என்பதையும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது சிறிய நாடுகள் அதிகம் பாதிக்கப்படும் எனவும், குறிப்பாக மொரிஷியஸ் அதிகப்படியான ஆபத்தை எதிர்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்படும் ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள், தென்னாப்பிரிக்கா, கேமரூன், அல்ஜீரியா ஆகியவை இடம்பெறும் எனவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளைக் காட்டிலும் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் அதிக காலம் இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதார வசதியை மேம்படுத்தும்படி, ஆப்பிரிக்காவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக, ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் தேவையான வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் எச்.ஐ.வி, காசநோய், மலேரியா, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை முக்கியமான பிரச்சினைகளாக இருந்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா தீவிரமடைந்தால், இதுபோன்ற நோய்களுக்கான சிகிச்சை பாதிக்கப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக, எச்ஐவி நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சகாராவுக்கு தென்பகுதியில் உள்ள நாடுகளில், எச்ஐவி நோயாளிகளின் இறப்பு விகிதம் இரட்டிப்பாகும் எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version