தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்கள், விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், பார்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை வரும் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
10, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் கொரோனா வைரஸ் சம்பந்தமாக 104, 044 – 2951 0400, 87544 48477 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை தவிர்ப்பதுடன், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின் போது குழுவாக விளையாடதவாறு கண்காணிக்க வேண்டும், சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் அலுவலகம் செல்வதை தவிர்க்க வேண்டும், பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதை அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், பயிற்சி வகுப்புகள், முகாம்கள், மாநாடுகள் நடத்த மார்ச் 31 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்வுகள் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளும் திருமண மண்டபங்களில் நடத்தக் கூடாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மார்ச் 31 ஆம் தேதி வரை புதிய நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறுவதை திருமண மண்டப உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், பிற வழிபாட்டு தலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் வரும் 31ம் தேதி வரை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு எடுத்து வரும் நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் குறித்து தவறான வதந்தியை பரப்பினால் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.