தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, முத்தையாபுரம், தருவை குளம் உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இங்கிருந்து கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிமாநிலங்களுக்கு லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள உப்பு தேக்கம் அடைந்துள்ளதாக, உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வராததால், தூத்துக்குடியில் சங்கு குளிக்கும் தொழிலாளிகள் கடலுக்கு செல்லவில்லை. வழக்கமாக, சங்குகளை கொள்முதல் செய்ய மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தூத்துக்குடி வரும் வியாபாரிகள், பயணத்தை ஒத்திவைத்துள்ளனர். இதனால் வரும் 31ம் தேதி வரை, கடலுக்கு செல்ல வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.