இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை அதிகமாக நடக்கிறது – முதலமைச்சர்

நாமக்கல் மாவட்டத்தில் 132 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 243 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 132 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், 91 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில்19 ஆயிரத்து 132 பயனாளிகளுக்கு மானிய விலையிலான அம்மா இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,நாமக்கல் மாவட்டம் கொரோனா நோய் தடுப்பில் முதன்மை மாவட்டமாக இருப்பதாகவும், நோய் பரவல் குறையத் தொடங்கியிருப்பதாகவும் கூறினார். சித்த மருத்துவ முறையில் கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் அளிக்கப்பட்டு நோய் தொற்று கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாகவும் கூறினார். தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நாமக்கல் நகர குடிநீர்த்திட்டப் பணிகள் விரைவில் முடிவுறும் எனவும், திருச்செங்கோடு சுற்று வட்டாரப்பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் விரைவில் வழங்கப்படும் எனவும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நாமக்கல் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு கூறினார். பள்ளிபாளையம், ராசிபுரம் பகுதிகளில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் நடவடிக்கை அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தேவையான உயர்மட்டப்ப பாலங்கள், சாலை வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதுடன், சட்டக் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரியும் அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.

Exit mobile version