மாநிலம் முழுவதும் கல்லூரி விடுதிகளில் கொரோனா பரிசோதனை!

சென்னை ஐஐடியில் கொரோனா பரவலைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரி விடுதிகளில் கொரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சென்னை ஐஐடியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இன்று மேலும் 8 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தில் 550 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், ஐஐடி வளாகத்தில் ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கடந்த சில தினங்களை விட தொற்று பரவலின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததாக கூறினார். மேலும்,மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் பரிசோதனை நடத்த உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.

 

தொடர்ந்து பேசிய அவர், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா முன் தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாமல் கூட்டத்தை கூட்டும் நிறுவனங்கள் மீது கொள்ளை நோய் தடுப்பு சட்டம், பொது சுகாதார சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்படும் என எச்சரித்தார்.

Exit mobile version