புதுச்சேரியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனோ தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் விளைவாக மதுபானக் கடைகள், பார்கள் ஆகியவை மூடப்பட்டன. பின்னர் 2 மாதங்களுக்குப் பிறகு (மே 24-ம் தேதி) மீண்டும் மதுக்கடைகளைத் திறக்க அரசு அனுமதித்தது. ஆனால், அப்போது, மதுபானங்களுக்கு கொரோனா வரி என்றொரு புதிய வரி விதிக்கப்பட்டது. நவம்பர் 30 வரை இந்த சிறப்பு கலால் வரி நீட்டிக்கப்பட்டது.
அதையடுத்து நவம்பர் 29-ம் தேதி கொரோனா வரியை நீக்க அரசுத் தரப்பில் கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால் அப்போதைய ஆளுநர் கிரண்பேடி அதை ஏற்கவில்லை. ஜனவரி 31-ம் தேதி வரை இவ்வரியை நீட்டித்தார்.
இந்நிலையில் தேர்தலும் முடிந்து நடத்தை விதிகள் அமலில் இருந்து விலக்கப்பட்ட நிலையில், கலால்துறை துணை ஆணையர் சுதாகர் பிறப்பித்துள்ள உத்தரவில், “மதுபானங்களுக்கான கரோனா வரி ஏப்ரல் 7-ம் தேதியுடன் நிறைவடைகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கமாக விற்ப்கப்பட்ட விலையை விடக் குறைவான விலையில் புதுச்சேரியில் மதுபானம் கிடைக்கிறது.