கொரோனா-வால் தங்கத்தின் விலை வரலாறு காணத அளவிற்கு உயர வாய்ப்பு

கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தால் தங்கம், கச்சா எண்ணெய் விலைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.

உலகப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கங்களாக உள்ள தங்கம் விலை மற்றும் கச்சா எண்ணெய் விலை ஆகிய இரண்டையுமே கொரோனோ வைரஸ் அச்சம் பாதித்து உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை காணப்படுகின்றது. இதனால் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் உள்ள தங்களது முதலீடுகளை தங்கத்தை நோக்கி நகர்த்தி வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இன்னும் சில வாரங்களுக்கு தங்கத்தின் விலை சவரன் 31 ஆயிரம் ரூபாய்குக் கீழே வராது என்றும், தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயரவும் வாய்ப்புகள் உள்ளதாகவும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
 
இன்னொரு பக்கம், கொரோனோ வைரஸ் பாதிப்புகளால் மக்கள் பயணம் செய்வது பெருமளவில் குறைந்துள்ளது. இது கச்சா எண்ணெய் இறக்குமதியையும், விலையையும் பாதித்து உள்ளது. குறிப்பாக உலகின் மிக முக்கிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான சீனாவின் எண்ணெய் இறக்குமதி பெருமளவில் குறைந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.
 
கொரோனோ அச்சம் காரணமாக பல்வேறு நாடுகளிலும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருவதால் விமானத்திற்கான வெள்ளை பெட்ரோலின் விலையும் சரிந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி பிராண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 68 டாலர் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது அது 56 டாலருக்கு வர்த்தகமாகி வருகின்றது. இதனால் பெட்ரோலிய ஏற்றுமதியை நம்பி உள்ள நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
 
இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது, அந்நோய் பரவியுள்ள நாடுகளுக்கான பாதிப்பு என்பதையும் தாண்டி ஒட்டுமொத்த உலகிற்கான பாதிப்பாக மாறி உள்ளது.

Exit mobile version