கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், பொது மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தியுள்ளார். நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், கொரோனா வைரஸ் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர், சென்னையில், பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அரசின் சார்பிலும், உள்ளாட்சி அமைப்புகள் சார்பிலும் துண்டுபிரசுரங்கள், வீடியோ, குறும்படங்கள், வானொலிகள் மற்றும் எல்இடி திரை கொண்ட வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், சென்னையை போன்று, நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், பிற மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். நகராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளின் நிலை குறித்தும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Exit mobile version