கொரோனா தடுப்பு நடவடிக்கை நிதி ; அள்ளிக் கொடுத்த "தல"

கொரோனா நிவாரண நிதியாக நடிகர் அஜித் ஒன்றே கால் கோடி ரூபாய் வழங்கியுள்ளார். பல நெருக்கடியான தருணங்களில் அவரின் மனிதநேயம் எப்படி இருந்திருக்கிறது என்பது குறித்த ஒரு சிறப்பு தொகுப்பை இப்போது பார்க்கலாம். தல என்ற வார்த்தை அஜித்தைத் தவிற யாருக்கும் பொருந்தாது என்பதற்கு நிறைய உதாரணங்களை சொல்லலாம். திரையில் ஒரு நடிகனுக்கு கிடைக்கும் வரவேற்பைத் தாண்டி தனி மனிதராக அஜித்தை ரசிக்கும் ரசிகர்கள் ஏராளம். அதற்கு காரணம் நடிகர் என்ற அகந்தை இல்லாமல் தன்னை ஒரு சாதாரண மனிதனாகவே நினைப்பதும், தன்னை சுற்றி இருப்பவர்களை நன்றாக பார்த்துக் கொள்வதுமே ஆகும். படப்பிடிப்பில் இருக்கும் போது படக் குழுவினருக்கு தன் கையாலயே பிரியாணி சமைத்துக் கொடுப்பதில் துவங்கி, தன் வீட்டுப் பணியாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தது வரை அவர் வெளியில் தெரியாமல் செய்த உதவிகள் ஏராளம்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 15 லட்சம் வழங்கினார் அஜித். திரைத்துறையில் பல உதவிகளை செய்து வரும் அஜித், விஸ்வாசம் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்த துணை நடிகரின் சடலத்தை மும்பையிலிருந்து சென்னைக்கு கொண்டு வந்து இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்ததோடு நேரில் வந்தும் கலந்து கொண்டார்.  திரைப்படத் தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களுக்கும் சத்தமில்லாமல் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் அஜித். கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக மாணவர்களோடு இணைந்து அஜித் தயாரித்த ட்ரோன் இப்போது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு ஐம்பது லட்சமும், முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ஐம்பது லட்சமும் வழங்கியுள்ள அஜித், திரைப்படத் தொழிலாளர்களுக்கு 25 லட்சத்தை கொரோனா நிவாரணமாக வழங்கியுள்ளார். படக் குழுவினர், மற்றும் தனது பணியாளர்கள் ஆகியோரை தாண்டி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் மனித நேயத்துடன் பல்வேறு உதவிகளை பேரிடர் காலங்களில் செய்து வருவதால்தான், ரசிகர்கள் அவரை தல என்று தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர்

Exit mobile version