மருத்துவமனைகளில் இடமில்லாமல் ஆம்புலன்ஸிலேயே உயிரிழக்கும் கொரோனா நோயாளிகள்

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பிவிட்ட நிலையில், உரிய சிகிச்சை கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் பலர் ஆம்புலன்ஸ்களிலேயே உயிரிழக்கும் பரிதாபம் தமிழ்நாட்டின் உண்மை நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. சென்னையில் ஒரே நாளில் 92 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ள நிலையில், அவசர சிகிச்சைக்காக பலர் அரசு மருத்துவமனையின் வாயிலில் காத்துக்கிடக்கின்றனர். சென்னை ஸ்டான்ஸி, ஓமந்தூரார் மற்றும் ராஜீவ்காந்தி பொது மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ்கள் இரவு, பகலாக நீண்டவரிசையில் நிற்கின்றன.ஆம்புலன்ஸ்களில் குறைந்த அளவிலேயே ஆக்சிஜன் இருக்கும் நிலையில், நோயாளிகளுக்கு எப்போது படுக்கைகள் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எங்குமே ஆக்சிஜன் இல்லை என்று கூறும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அங்கும், இங்கும் அலைக்கழிக்கப்படுவதாக கவலை தெரிவித்தனர்.தமிழ்நாடு முழுவதும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகப்படுத்தினால் மட்டுமே கொரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்ற முடியும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் உளக்குமுறலாக உள்ளது.

Exit mobile version