கொரோனா பிறப்பிடம்? நீடிக்கும் சந்தேகங்கள்

சீனாவின் வூஹான் மாகாண ஆய்வுக் கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், இவ்விவகாரத்தில் சீனா பல உண்மைகளை மூடி மறைப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.  
22 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய் பாதிப்பு, ஒரு லட்சத்து 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி, கோடிக்கணக்கான மக்கள் வேலையிழப்பு, வரலாறு காணாத பொருளாதார சரிவு உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி உலகையே ஸ்தம்பிக்க செய்துள்ளது கொரோனா வைரஸ். இந்த கொரோனா வைரஸ் முதன்முதலில் எங்கு தோன்றியது, எப்படி பரவியது, இந்த வைரஸ் இயற்கையாக தோன்றியது தானா, அல்லது திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா என்பன போன்ற பல கேள்விகளுக்கான பதில்கள் மர்மமாகவே இருந்து வருகின்றன. சீனாதான் கொரோனா வைரஸை பரப்பியதாக பலரும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பாக,  சீனாவுக்கு அமெரிக்காவும் நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.

சீனாவின் பரிசோதனை மையம் ஒன்றில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா திட்டவட்டமாக கூறி வருகிறது. ஆனால், உயிரியல் ஆயுதமாக கொரோனா வைரசை சீனா உருவாக்கவில்லை எனவும் அமெரிக்கா தெரிவிக்கிறது. சில காரணங்களுக்காக இந்த வைரஸை சீனா உருவாக்கி இருக்கலாம் எனவும், கவனக்குறைவால் வைரஸ் வெளியில் பரவியிருக்கலாம் எனவும் அமெரிக்கா தெரிவித்து வருகிறது. ஆனால் இதனை மறுத்துள்ள சீன அரசு, கொரோனா வைரஸ் முதன்முதலில் தங்கள் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், அந்த வைரசின் பிறப்பிடம் சீனா கிடையாது என விளக்கம் அளித்துள்ளது. இவ்வாறாக பல்வேறு கருத்துக்கள் பரவி வரும் நிலையில், இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சீன அதிபர் ஜீ ஜின்பிங்-உடன் தொலைபேசி வாயிலாக ட்ரம்ப் பேசியதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, ட்ரம்ப் பதிலளிக்க மறுத்து விட்டார்.

மேலும், கொரோனா விவகாரத்தில் சீன அரசு உண்மைகளை மறைப்பதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவும் குற்றம் சாட்டியுள்ளார்.  உயிரியல் போர் தொடுப்பதற்காக சீன அரசு கொரோனா வைரசை உருவாக்கவில்லை எனக் கூறிய பாம்பியோ, அமெரிக்க விஞ்ஞானிகளை விட சீன விஞ்ஞானிகள் தலைசிறந்தவர்கள் என காட்டிக்கொள்ளும் பொருட்டு இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். மேலும், வூஹான் மாகாண ஆய்வுக் கூடத்திலிருந்து சில மைல்கள் தொலைவில் இறைச்சி சந்தை உள்ளதையும் பாம்பியோ சுட்டிக்காட்டினார். கொரோனா பரவல் குறித்து அமெரிக்கா விசாரணை நடத்தி வருவது போல,  பல்வேறு நாட்டை சேர்ந்த மருத்துவர்களும் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் எங்கு, எப்படி தோன்றியது என்பதை கண்டுபிடித்தால் மட்டுமே, மீண்டும் அந்த வைரஸ் தோன்றாமல் தடுக்க முடியும். எனவே கொரோனா குறித்த தகவல்களை சீனா அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும், அது குறித்த விசாரணைகளுக்கும், ஆய்வுகளுக்கும் சீனா அரசு ஒத்துழைக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Exit mobile version