கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக பொதுமக்கள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தேர்தல் பிரசாரத்தின் போது உரையாற்றிய முதலமைச்சர், தமிழகம் முழுவதும் கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக தொடரப்பட்ட சுமார் 10 லட்சம் வழக்குகள் கைவிடப்படும் என அறிவித்தார்.
வன்முறையில் ஈடுபட்ட வழக்குகள், முறைகேடாக இ-பாஸ் தயாரித்து பயணித்தது, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட வழக்குகள் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் பொதுமக்கள் நலன் கருதி கைவிடப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களில் தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதில் வன்முறையில் ஈடுபட்டது, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்குகள் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் பொதுமக்கள் நலன் கருதி கைவிடப்படுவதாக தெரிவித்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தினால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுமாறு பொதுமக்களின் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், சட்டத்திற்கு உட்பட்டு அரசு கனிவோடு பரிசீலிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.