இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 20 பேருக்கு கொரோனா பாதிப்பு

சக்திவாய்ந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து, உலகின் பல்வேறு நாடுகள் இங்கிலாந்துடனான தொடர்பை துண்டித்து வருகின்றன.

உலகில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸை விட 70 சதவீதம் வீரியமான புதிய வகை கொரோனா வைரஸ், லண்டன் மற்றும் தெற்கு இங்கிலாந்தில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, புதிய வகை வைரஸ் தங்கள் நாடுகளில் பரவாமல் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. ஏற்கெனவே கனடா, டென்மார்க் உள்ளிட்ட 21 நாடுகள் இங்கிலாந்தில் இருந்து வரும் விமான சேவையை ரத்து செய்துள்ளன.

இந்நிலையில், ரஷ்யா, கொலம்பியா, பனாமா உள்ளிட்ட 20 நாடுகள், இங்கிலாந்துக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளன. அதேபோல சவுதி, ஓமன், குவைத், இஸ்ரேல், ஸ்பெயின் ஆகிய நாடுகள் தங்கள் எல்லையை முழுவதுமாக மூடிவிட்டன. இந்தியாவில், இன்று முதல் டிசம்பர் 31 வரை இங்கிலாந்து விமானங்கள் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை டெல்லி வந்த 6 பேருக்கும், செவ்வாய்க்கிழமை அகமதாபாத் வந்த 4 பேருக்கும், அம்ரிஸ்டர் வந்த 8 பேருக்கும், ஞாயிற்றுக்கிழமை கேரளா வந்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் இதுவரை புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறியுள்ளார்.

 

Exit mobile version