சென்னை மாநகராட்சியின் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா பாதிப்பு குறைந்து, குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா தடுப்பு, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளை கண்டுபிடிப்பதற்காக 12 ஆயிரம் களப்பணியாளர்கள் பணியாற்றுவதாகவும், நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார். கடந்த மே 8ம் தேதி முதல், ஜூலை 14ம் தேதி வரை சென்னையின் 15 மண்டலங்களில் 17 ஆயிரத்து 134 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெற்றுள்ளதாகவும், இதில், 10 லட்சத்து 65 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாகவும் கூறினார். கொரோனா அறிகுறியுடன் இருந்த 50 ஆயிரத்து 599 பேருக்கு பரிசோதனை நடத்தி, 12 ஆயிரத்து 237 பேருக்கு தொற்று கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார். சென்னையில் நாள்தோறும் சராசரியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதுபோன்ற நடவடிக்கைகளின் விளைவாக சென்னையில் தொற்று படிப்படியாக குறைந்து வருவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். சென்னையில் சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 200 என்ற நிலையில் குறைந்துள்ளதுடன், குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். இதேபோன்று பிற மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் அவரவர் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்து, கேட்டறிந்தார். சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் தற்போதைய குடிநீர் நிலவரம் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் நிலை குறித்து கேட்டறிந்தார். கூட்டுக் குடிநீர் திட்டங்களில் உள்ள கடைக்கோடி கிராமங்களுக்கும் போதுமான அளவில் குடிநீர் வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
Discussion about this post