இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 2 லட்சத்து 67 ஆயிரத்து 334 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2 கோடியே 54 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 32 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில், தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கு அதிகமாக உள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 291 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 529 பேர் உயிரிழந்துள்ளதால், பலியானவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 83 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, 18 கோடியே 58 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.