தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 684 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 74 ஆயிரத்து 940 ஆக அதிகரித்துள்ளது.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரத்து 684 பேரில், 3 ஆயிரத்து 310 பேர் ஆண்கள், 2 ஆயிரத்து 374 பேர் பெண்கள் ஆவர். தலைநகர் சென்னையில் ஒரே நாளில் 988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் 446 பேருக்கும், கடலூரில் 407 பேருக்கும், செங்கல்பட்டில் 364 பேருக்கும் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் 242 பேருக்கும், திருவள்ளூரில் 277 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 6 ஆயிரத்து 599 பேர் குணமடைந்துள்ளநிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 இலட்சத்து 16 ஆயிரத்து 715ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம், 87.74 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் 87 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 50 ஆயிரத்து 213 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.