கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை மறைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பியதால், நோயாளிகள் வெளியே காத்திருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆக்சிஜன் படுக்கைகளும் முழுமையாக நிரம்பியதால், கொரோனா நோயாளிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
போதுமான கழிப்பறை வசதிகள் இல்லாதது கூடுதல் அவதியை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல், மருத்துவர்களும் செவிலியர்களும் திணறி வருகின்றனர்.
இம்மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 7 முதல் 15 மரணங்கள் வரை நிகழ்வதாகவும், ஆனால் அவையெல்லாம் கொரோனா கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உயிரிழந்தோரின் சடலங்களை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, உறவினர்களிடம் ஒப்படைப்பதே, பொய்க்கணக்கை உறுதிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.