கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் உச்சம் அடைந்துள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றின் இருப்பு குறித்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான வழக்கறிஞர் நவீன்குமார் மூர்த்தி என்பவர், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களை, வேறு காரணங்களால் உயிரிழந்ததாக கூறி சில மருத்துவமனைகள் உடல்களை ஒப்படைத்து வருவதாக குற்றம்சாட்டினார்.
இதுபோல், நோய் பாதிப்பை கட்டுப்படுத்த, கடந்த அரசு கையாண்ட அணுகுமுறையை தற்போதைய அரசு கையாளவில்லை என பொதுமக்களில் ஒருவராக ஆஜரான வைஷ்ணவி என்பவர் குற்றம்சாட்டினார். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு கொரோனா பரிசோதனை போதுமான அளவுக்கு நடத்தவில்லை என அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டக் கூடாது என அறிவுறுத்தி விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தது.