மீண்டும் சவாலான சூழல் – முழு ஊரடங்கு அவசியமில்லை!

கொரோனா இரண்டாவது அலை பரவல், முதல் அலையை விட மிக வேகமாக இருப்பதாக பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

 நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து வரும் நிலையில், பல்வேறு மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில் தமிழ்நாடு அரசு சார்பில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் வருவாய்த்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா இரண்டாவது அலையின் பரவல், முதல் அலையை விட மிக வேகமாக இருப்பதாக எச்சரித்தார். இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையிலும், பொதுமக்கள் அலட்சியம் காட்டுவது வேதனை தருவதாக பிரதமர் கூறினார். பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தடுப்பு பணிகளில் தளர்வு காணப்படுவதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, 70 சதவிகித ஆர்.டி.- பி.சி.ஆர். பரிசோதனையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

கொரோனா பரவலை தடுக்க கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக பின்பற்றுவது சிறந்த வழி எனக்கூறிய பிரதமர், மீண்டும் முழுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார். பொருளாதார பாதிப்பு இல்லாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டியது அவசியம் என்றார். அதேசமயம் தொற்று பரவலை தடுக்க மைக்ரோ கட்டுப்பாட்டு மையங்களை தீவிரமாக செயல்படுத்த வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். இரவு 9 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என ஆலோசனை கூறிய பிரதமர் மோடி, இரவு ஊரடங்கை கொரோனா ஊரடங்கு என அழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 100 சதவிகிதம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென்றும், தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல், விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டுமென்றும் பிரதமர் வலியுறுத்தினார். ஏப்ரல் 11ஆம் தேதி 14ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழாவை நடத்தலாம் என மாநில அரசுகளிடம் கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, கொரோனா இரண்டாவது அலையை நிச்சயம் தடுக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version