தமிழ்நாட்டில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு 2 லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டியது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 2 லட்சத்து 20 ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 63 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நோய் தொற்று கண்டறியப்பட்ட 6 ஆயிரத்து 993 பேரில், 4 ஆயிரத்து 162 பேர் ஆண்கள் என்றும், 2 ஆயிரத்து 831 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.
சென்னையை பொறுத்த வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 857 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து, ஒரே நாளில் 5 ஆயிரத்து 723 பேர் குணமடைந்துள்ளதால், மீண்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 249 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 73 புள்ளி 51 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதன்படி, செங்கல்பட்டில் 448 பேரும், திருவள்ளூரில் 474 பேரும், விருதுநகரில் 338, காஞ்சிபுரத்தில் 362 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக மேலும், 77 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 571 ஆக உயர்ந்துள்ளது.