சீனாவில் 6 வாரங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்கியுள்ளதால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து ரஷ்யாவுடனான எல்லையை சீனா மூடியுள்ளது. கடந்தாண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. தொடக்கத்தில் சீனாவில் கொரோனா அதிவேகமாக பரவினாலும், அதன் தாக்கம் பின்னர் படிப்படியாக குறைய தொடங்கியது. அமெரிக்காவில் 23,000, இத்தாலியில் 20,000, ஸ்பெயினில் 17,000 என உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், சீனாவில் 3,500க்கும் குறைவாகவே உயிரிழப்புகள் ஏற்பட்டன. துரிதமாக நோய் பரவலை சீன அரசு கட்டுப்படுத்தியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நோய் பரவல் குறையத் தொடங்கியதால், சீனா விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பியது. திரையரங்குகள் உள்ளிட்டவை மீண்டும் திறக்கப்பட்டன. பொதுமக்கள் தங்கள் வழக்கமான பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினர். நோயால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளுக்கு உதவும் வகையில், முகக்கவசங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை சீன அரசும் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது. இந்நிலையில், 6 வாரங்களுக்கு பிறகு சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் தலை காட்டத் தொடங்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 12ஆம் தேதி 108 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், சீனாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தொடங்கியுள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, சீன அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 108 பேரில் 99 பேர் வெளிநாட்டினர் என்பதும், அதிலும் 49 பேர் ரஷ்யர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீன எல்லைப்பகுதியான ஹெயிலோங்ஜியாங் வழியாக ரஷ்யர்கள் 49 பேரும் சீனாவுக்குள் நுழைந்ததும் தெரியவந்துள்ளது. ரஷ்யர்களால் சீனாவில் நோய் பரவல் ஏற்படுவதை தடுக்க, இரு நாட்டு எல்லையை காலவரையின்றி மூடுவதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும், வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளை தனிமைப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்படும் 60% பேருக்கு நோய் அறிகுறி எதுவும் இல்லை என கூறப்படுகிறது. இதனால், நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதில் மருத்துவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. உண்மையில் சீனாவில் இரண்டாம் கட்ட நோய் பரவல் தொடங்கியுள்ளதா?, சீன மருத்துவர்கள் மேற்கொண்டுள்ள நோய்தடுப்பு பரிசோதனை பலனளிக்குமா என்பதற்கான விடை சில நாட்களில் தெரியவரும்.