கொரோனா வைரஸ் பரவுவதற்கு, பிராய்லர் கோழிதான் காரணம் என பரப்பப்படும் தவறான வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் என, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருப்பூரில் புதிய மருத்துவக்கல்லூரி அமைய உள்ள இடத்தில், வரும் 15ஆம் தேதி, முதலமைச்சர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான கால்கோள் விழா, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜய கார்த்திகேயன், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல், திருப்பூர் மாநகர துணை ஆணையர் பத்ரிநாராயணன், திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அரசு மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பரவுவதற்கு, பிராய்லர் கறிக்கோழிதான் காரணம் என, வதந்தி பரப்பப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் அதனை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.