பொதுமக்களுடன் கரம் கோர்த்த போலீசார்!!

அமெரிக்காவில் கடந்த வாரம் George Floyd என்ற கருப்பினத்தவர் போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு நீதி கேட்டும், போலீசாரின் அராஜகப் போக்கை கண்டித்தும் அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. கற்களை வீசி தாக்குதல், போலீசாரின் வாகனங்கள் அடித்து நொறுக்குதல், கட்டடங்களுக்கு தீ வைத்தல் போன்ற சம்பவங்களால் அமெரிக்காவின் பல மாகாணங்கள் ஸ்தம்பித்துள்ளன.

இதன் காரணமாக, 40க்கும் மேற்பட்ட நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 15 மாகாணங்களில் தேசிய காவலர் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பேசிய தேசிய காவல் படையின் தலைவர் ஜெனரல் Joseph Lengyel, உள்நாட்டு அமைதியைப் பாதுகாக்கும் பொருட்டு மேலும் 5,000 வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் கூடுதலாக ஆயிரக்கணக்கான வீரர்கள் களமிறக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.அதேவேளையில், அமெரிக்க காவல்துறையில் நிறவெறி உள்ளது என்ற குற்றச்சாட்டை, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Robert O’Brien திட்டவட்டமாக மறுத்துள்ளார். காவல்துறை உள்ளிட்ட பணிகளில் கருப்பினத்தவர்கள், ஆசிய நாட்டவர்கள் என பல்வேறு இனத்தவர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்களில் 99.9 சதவீதம் பேர் சிறந்த குடிமகன்களாக விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கருத்தை வழிமொழிந்துள்ள Minnesota மாகாண ஆளுநர் Tim Walz, தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தில் தவறான நபர்கள் ஊடுருவி இருக்கலாம் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.பல மாகாணங்களில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாரிடையே ஏற்படும் மோதலால் பதற்றம் நிலவினாலும், சில இடங்களில் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அத்தகைய போராட்டங்களில் போலீசாரும் பங்கேற்று வருகின்றனர்.

Chris Swanson என்ற காவல் அதிகாரி போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இனவெறிக்கு எதிரான இந்த ஒன்றுகூடல், போராட்டமாக அல்லாமல் அமைதியான பேரணியாக நடைபெற வேண்டும் என தாம் விரும்புவதாக தெரிவித்தார். அத்துடன் அந்த பேரணியில் அவரும் கலந்து கொண்டார்.அதேபோல பிற பகுதிகளிலும் காவலர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், George Floyd-ன் மறைவுக்கு முழங்காலிட்டு அஞ்சலியும் செலுத்தினர். போராட்டக்காரர்களை மற்றும் போலீசார் இடையேயான இந்த இணக்கமான போக்கிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மறுபுறம், வெள்ளை மாளிகைக்கு அருகே தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்ற வண்ணமே உள்ளன. அண்மையில் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியபோது, அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதுகாப்பு காரணங்களுக்காக, ரகசிய பாதுகாப்பு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகைக்கு வெளியே திடீரென நடைபெற்ற போராட்டத்தை போலீசார் எதிர்பார்க்கவில்லை எனவும், அதனால் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக, ரகசிய பாதுகாப்பு அறையில் டிரம்ப் இருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. ட்ரம்பின் மனைவி, மகன் உள்ளிட்டோரும் பாதுகாப்பு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்களா என்ற தகவல் வெளியாகவில்லை.இதனிடையே, கைதான George Floyd-ஐ போலீசார் தங்களது வாகனத்தில் வைத்து தாக்குவது போன்ற புதிய சிசிடிவி காட்சி ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. இதில் George Floyd-ன் உருவம் தெரியவில்லை. இருந்தபோதிலும், இந்த வீடியோவும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.இனவெறிக்கும், அதிகார துஷ்பிரயோகத்திற்கும் எதிராக அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டங்கள், ட்ரம்பின் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

Exit mobile version