விபத்தில் கால் துண்டான நபருக்கு முதலுதவி அளிக்காமல், அவரிடம் சாதி என்ன என்று காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கேட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையை சேர்ந்த கட்டட தொழிலாளர்களான ராமச்சந்திரன், பெரியசாமி ஆகிய இருவரும், வேலை நிமித்தமாக கோவை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற கண்டெயினர் லாரியை முந்த முயன்று, விபத்தில் சிக்கினர். கண்டெயினர் லாரியின் பின்பக்க டயரில் ராமச்சந்திரனின் கால் சிக்கியது. பின்னால் அமர்ந்திருந்த பெரியசாமிக்கும் கால் முறிந்தது. இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் அத்தியப்பன், இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பாமல், அவர்களிடம் சாவகாசமாக விவரம் சேகரித்துக் கொண்டிருந்தார். அதைவிட பெரிய கொடுமையாக, சதைகள் கிழிந்து, ரத்தம் வடிந்து கொண்டிருக்கும் அவர்களிடம், இரக்கமே இல்லாமல் நீங்கள் என்ன சாதி என கேட்டார்.
செல்போனில் படம் பிடிக்கப்பட்ட இந்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. உயிருக்கு போராடும் நபர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காமல், சிறிதும் கடமை உணர்வில்லாமல் சாதியை கேட்கலாமா என சமூக வலைதளங்களில் பலரும் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை வறுத்தெடுத்தனர். கண்டனங்கள் வலுத்ததை அடுத்து, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் அத்தியப்பன், அவசர அவசரமாக நாமக்கல் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். படுகாயமடைந்த இருவரும், ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.