ஊரக உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற ஒத்துழையுங்கள்- மாநில தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் ஒத்துழைக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தங்களது தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், வாக்குச்சாவடிகளுக்கு அருகில் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி சீட்டு பெற்றவர்கள் தவிர வேறு யாரும் வாக்குச்சாவடிக்குள் நுழையக் கூடாது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ, வாக்குச்சாவடிக்கு சென்று வர வாக்காளர்களுக்கு இலவச பயணம் ஏற்பாடு செய்யக் கூடாது என்றும், ஒவ்வொரு வேட்பாளரும் சொந்த உபயோகத்திற்காக ஒரே ஒரு வாகனத்தை மட்டும் பயன்படுத்தலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்பாளர் பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட வாகனத்தை வேறு யாரும் பயன்படுத்த கூடாது என்றும், வழிகாட்டுதல்களை மீறி பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களது தேர்தல் முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்களை தவிர மாநில தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வ கடிதம் அளிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் நுழைய முடியும் என பல்வேறு கட்டுப்பாடுகளையும், வழிமுறைகளையும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Exit mobile version