தமிழகத்தில், முதல் முறையாக, செயற்கை நுண்ணறிவுடைய சமையல் இயந்திரம் மூலம் சமையல் செய்யும் அதிநவீன தொழில்நுட்பத்தை, சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர் கண்டுபிடித்து, அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறார்.
சமையல் என்றால், உடனடியாக நமக்கு நினைவுக்கு வருவது கைப்பக்குவம் தான். பாட்டி சமையல், அம்மா சமையல், காரைக்குடி சமையல், செட்டிநாடு சமையல் என்றெல்லாம் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால், இனிமேல், இயந்திர பக்குவம்தான். ஆம், இன்றைய இயந்திர வாழ்க்கையில், இயந்திரம் ஒன்றே நமக்குத் தேவையான அன்றாட சமையலை செய்து முடித்து விடுகிறது என்கிறார் ரோபோசெஃப் நிறுவனத்தின் இயக்குனர் ஹேமாவதி.
சமையலுக்கு தேவையான காய்கறிகளை கழுவி, துண்டு துண்டாக நறுக்குவது முதல் அனைத்து பணிகளையும் இந்த இயந்திரமே செய்துவிடுகிறது. சமையல் செய்யும் இந்த இயந்திரத்தை பார்க்கும்போது, இல்லத்தரசிகளுக்கு மிகவும் ஆவலாக இருக்கும். இதுபோன்ற ஒரு இயந்திரத்தை நம் வீட்டிலும் வாங்கி வைத்து விடலாமா என்ற அளவுக்கு, இயந்திரத்தின் சமையல் அமோகமாக இருக்கும் என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.
இந்த இயந்திரம் மூலம் அதிகபட்சம் இரண்டு மணி நேரத்தில் எந்த ஒரு உணவையும் சமைக்க முடியும் என்று கூறுகின்றனர். வீட்டில் நடக்கும் சுபகாரியங்கள், நட்சத்திர விடுதிகள், ஹோட்டல்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் கூட தயார் செய்து அனுப்பப்படுவதாக ரோபோசெஃப் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இயந்திரத்தின் மூலம் சமைக்கப்படுவதால், சுவை மாறி விடுமோ என்ற அச்சம் பலருக்கு தோன்றலாம். சமையல் கலைஞர்களின் குறிப்புகளும், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவையும், கணினி மூலம் ஏற்கனவே பதிவு செய்து, அதன் மூலம் சமைப்பதால், பாரம்பரிய சமையல் சுவையில் எந்தவித மாற்றமும் இருக்காது என்கின்றனர். சமையலுக்கு பெயர்போன தமிழகத்தில், பாரம்பரிய சுவை மாறாத இந்த அதிநவீன சமையல் தொழில் நுட்பம், மக்களைக் கவரும் என்றே கருதலாம்.