அரியலூரில் நடைபெற்ற இயற்கை சார்ந்த உணவு பொருட்கள் தயாரிப்பது குறித்து சத்துணவு பணியாளர்களுக்கு நடைபெற்ற சமையல் போட்டியில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
அரியலூர், செந்துறை, திருமானூர் தா.பழூர், ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் உள்ளிட்ட 6 ஒன்றியங்களில் உள்ள சத்துணவு மையங்களில் பணியாற்றக் கூடிய பணியாளர்களுக்கு இயற்கை சார்ந்த உணவு தயாரிப்பது குறித்த சமையல் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பான முறையில் உணவு பொருள் தயாரித்த ஒன்றியத்திற்கு தலா 10 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு சமையல் போட்டி நடைபெற்றது.
அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டியில் அடுப்பில்லா சமையல், எண்ணெய் இல்லாத சமையல், இயற்கை உணவு ஆரோக்கியமான உணவு, சிறுதானியங்கள் மட்டும் பயன்படுத்தி சமையல், சிற்றுண்டி மற்றும் மாலை உணவு போன்ற தலைப்புகளில் உணவுகளை தயாரித்திருந்தனர்.
சிறந்த இயற்கை சார்ந்த உணவுப் பொருள் தயாரித்த சத்துணவு பணியாளர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கேழ்வரகு, கம்பு, சோளம், கொள்ளு உள்ளிட்ட பல்வேறு சிறு தானியங்கள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி உணவுப் பொருட்களை தயாரித்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.