அதிக மரங்களை வளர்த்து, புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் நோக்கில், கும்பகோணத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் ஒன்றரை லட்சம் விதைப்பந்துகளை தயாரித்துள்ளனர்.
நகர்ப்பகுதிகள் விரிவாக்கம் காரணமாக, அதிகளவில் மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால், புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. அதிக அளவில் மரம் வளர்த்து புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்தநிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் சுமார் ஆயிரம் பேர் சேர்ந்து, ஒன்றரை லட்சம் விதை பந்துகளை உருவாக்கியுள்ளனர். வில்வம், பூவரசு, வேம்பு போன்ற 36 வகையான மரங்களின் விதைகளை கொண்டு அவை தயாரிக்கப்பட்டுள்ளன. விதைப்பந்துகள் உலரவைக்கப்பட்டு, மழைக்காலங்களின்போது, ஆற்றங்கரை, குளக்கரை, சாலையோரங்களில் விதைக்கப்பட உள்ளன.