நெல்லையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில், உலக சாதனையின் ஒரு முன்னோட்டமாக, 10 நாட்களும் 24 மணி நேரம் வாசிப்பு இயக்கம் நடைபெற்றதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய பதிபாளர்கள், விற்பனையார்கள் சங்கம் சார்பில், பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி மைதானத்தில், புத்தகத் திருவிழா நடைபெற்றது. கடந்த 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடந்த இந்த புத்தகத் திருவிழாவில், 127 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், தினமும் கருத்தரங்கு, கலந்துரையாடல், பட்டிமன்றங்கள், புத்தக வெளியீடு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், 5 லட்சம் பேர் இந்த புத்தக திருவிழாவில் கலந்து கொண்டனர். இதனையடுத்து, சாகித்ய அகடாமி விருதுகள் பெற்ற 16 பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர். இந்த புத்தகத் திருவிழாவின் ஒரு அங்கமாக, கடந்த பத்து நாட்களும், 24 மணி நேரமும் தொடர் வாசிப்பு இயக்கம் நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், பார்வைத்திறன் குறைந்தோர், கேட்கும் திறன் குறைந்தோர் என, மொத்தம் 860 பேர் தொடர்ந்து வாசித்து, உலக சாதனைக்கான முயற்சியில் ஈடுபட்டனர். இதன் நிறைவு நாள் நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இந்த புத்தக திருவிழாவில், புத்தக உண்டியல் மூலம் புத்தகங்கள் பெறப்பட்டு, அரசு பள்ளி நூலகங்களுக்கு வழங்கப்பட்டதாக கூறியுள்ளார்.