மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள இ-பதிவு கட்டாயம் என உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு அரசு, இ-பதிவு முறையை எளிதாக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே இ-பதிவில் சேர்க்கப்பட்ட திருமணம் என்ற பிரிவு சில மணி நேரத்தில் நீக்கப்பட்டதால் பொதுமக்கள் குழப்பமடைந்தனர்.
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாவட்டங்களுக்குள்ளும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதற்கும் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. எனினும் திருமணம், இறப்பு, நேர்முகத்தேர்வு, முதியோர் பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்காக வெளியூர் செல்பவர்களுக்காக இ பதிவு முறை செயல்படுத்தப்பட்டது. ஆனால், இ பதிவு தொடங்கிய நாள் முதலே அதில் பதிவு செய்வதில் குழப்பங்கள் தொடர்கதையாகி வருகிறது. சர்வர் முடக்கத்தினால் முதல்நாளே முன்பதிவு செய்யமுடியாமல் பொதுமக்கள் திணறினர். இ-பதிவு இணையதளத்தில், இறப்பு, முதியோர் பராமரிப்புக்கான ஆவணங்களை இணைப்பதில் சிக்கல்கள் எழுந்தன.
இந்நிலையில் 17ஆம் தேதி இ-பதிவு இணையதளப் பக்கத்தில் இருந்து திருமணம் என்ற பிரிவு திடீரென நீக்கப்பட்டது. இதனால் உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களின் திருமணத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மீண்டும் திருமணம் என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. ஆனால், சில மணி நேரங்களிலேயே மீண்டும் அந்த பிரிவு நீக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில், அவசர தேவைக்காக செல்பவர்களை, இ-பதிவு நடைமுறை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில், திருமணத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் கலந்து கொள்வதற்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு, இ-பதிவு முறையில் உள்ள நடைமுறை சிக்கல்களுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.