பிரபலங்கள், தொழிலதிபர்கள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்களின் சமூக வலைதளங்கள் தற்போது ஹேக்கர்கள் கட்டுப்பட்டில் இருப்பதின் பின்னணி என்ன என்பதை விளக்குகிறது இந்த செய்திக் குறிப்பு……
சமூக வலைதளங்களில் மிக முக்கியமாக கருதப்படும் ட்விட்டரில் சமீப காலமாக பல சர்ச்சைகள் எழுந்துள்ளன். அதில் ஒன்று தான் ஹேக்கிங். பல்வேறு பிரபலங்களின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கங்களில், தடை செய்யப்பட்ட பிட்காயின் தொடர்பான பதிவுகள் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதுகுறித்து ஆய்வு செய்ததில் அவர்களது ட்விட்டர் பக்கங்களை மர்ம நபர்கள் சிலர் ஹேக் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, வாரன் பஃபெட், பில்கேட்ஸ், ஜோ பிடன் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. அந்த வரிசையில் தற்போது இந்திய பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. சுமார் 25 லட்சம் follower-களை கொண்ட அந்த ட்விட்டர் கணக்கில், PM National Relief fund-க்கு கிரிப்டோகரன்சி மூலம் பணம் அனுப்புங்கள் என பிட்காயின் முகவரி கொண்ட பதிவு வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து சைபர் குற்றங்களை கண்காணிக்கும் நிபுணர் ராஜேந்திரன் கூறுகையில், இதுபோன்று பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்வது, இரண்டு காரணங்களுக்காக இருக்கும் என்கின்றார். ஒன்று பிரபலங்களிடன் பிணை தொகை கேட்க, அல்லது தொழில்நுட்ப ரீதியில் அவர்களை நெருங்க முடியும் என்பதை நிரூபிப்பதற்காக என்று கூறிகிறார்.
தகவல் தொழில்நுட்ப உலகில் புதிய புதிய முறையில் பாதுகாப்பை மேம்படுத்தினாலும், ஹேக்கர்கள் இன்னும் ஒருபடி மேலே போய், பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து அதன் மூலம் பிரபலங்களில் சமூக வலைதள பக்கங்களை ஹேக் செய்யும் சம்பவங்கள் தொடர்கின்றன. நியூஸ் ஜெ செய்திகளுக்காக செய்தியாளர் கோபால்….