விசைப்படகு மீது சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதிய விபத்தில், கடலில் மூழ்கிய மீனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
மாயமான தனது கணவர் வீடு வந்து சேருவார் என்ற ஏக்கத்துடனும், கண்ணீருடனும், வாசலை பார்த்தப்படி, கைக் குழந்தையுடன் காத்துக்கிடக்கிறார் ஓர் இளம்பெண்…
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்கள், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் என, மொத்தம் 14 மீனவர்கள், மீன்பிடி தொழிலுக்காக கடந்த 10-ம் தேதி விசைப்படகில் ஆழ்கடலுக்கு பயணித்தனர்.
கர்நாடக மாநிலம் மங்களூர் கரையை ஒட்டிய ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, விசைப்படகு மீது சிங்கப்பூர் சரக்கு கப்பல் ஒன்று மோதி விபத்தானது.
இதில், விசைப்படகு உடைந்து கவிழ்ந்து, படகில் இருந்த அனைவரும் கடலில் மூழ்கினர்.
கடலில் மூழ்கி தத்தளித்து உயிர் பிழைத்து வீடு திரும்பிய மீனவர் வேல்முருகன் அந்த விபத்தை குறித்து விவரித்தார். அந்த நேரத்தில் ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் மழையால், மீனவர்களின் நிலைமை மிக மோசமானது.
வேல்முருகன் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுனில் தாஸ் ஆகியோர், விபத்தை ஏற்படுத்திய சிங்கப்பூர் கப்பலின் ஊழியர்களால் மீட்கப்பட்டு, இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தாசன், அலெக்சாண்டர், மாணிக்கதாஸ் ஆகிய மூன்று மீனவர்கள், இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
கடலில் மூழ்கிய மற்ற 9 மீனவர்களை தேடும் பணிகளில் இந்திய கடற்படை ஈடுபட்டுள்ளது. இதில் நான்கு நாட்களுக்கு பிறகு, 4 மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதில் ஒருவர், ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனிடையே, எஞ்சிய 5 மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தேடப்படும் மீனவர்களில் ஒருவரான கன்னிராஜபுரத்தை சேர்ந்த வேத மாணிக்கம் என்பவரின் மனைவி விஜயா, கையில் குழந்தையுடனும், நெஞ்சில் பயத்துடனும் காத்துக் கிடக்கிறார்.
வேத மாணிக்கம் – விஜயா தம்பதிக்கு திருமணம் நடைபெற்று 3 ஆண்டுகள் முடிந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தான் குழந்தை பிறந்ததுள்ளது.
இந்நிலையில், கணவனின் கதி கேள்விக்குறியாக மாறியதால், ஒரு கையில் குழந்தையுடனும், மறுகையில் தனது திருமண புகைப்படத்தையும் வைத்துக்கொண்டு, கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் விஜயாவை தேற்ற முடியாமல், உறவினர்கள் கலங்கி நிற்கின்றனர்.
அப்பா மீண்டும் நம்மிடம் வந்துவிடுவார், நம்மோடு வாழ்வார் என்று தன் குழந்தைக்கு ஆறுதல் சொல்வதாக நினைத்து, கண்ணீரை துடைத்துக்கொண்டு, தன்னை தானே தேற்றிக்கொள்ளும் விஜயா, தன் கணவனின் வருகையை எதிர்பார்த்து வாசலை பார்த்த வண்ணமே அமர்ந்திருக்கிறார்.
விபத்து நடந்து 4 நாட்கள் ஆன நிலையில், மாயமானவர்களை மீட்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்துவதன் நோக்கம், நொடிக்கு நொடி கூடிக்கொண்டே போகும் அச்சத்தை உடைத்தெறிவதற்காகத் தான்.