தமிழகத்தில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது
முதல் நாளில் மாற்றுத் திறனாளிகள், ராணுவ வீரர்களின் வாரிசுகள்,விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கலந்தாய்வுக்காக ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசு கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டுக்கென 3 ஆயிரத்து 968 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. அதேபோல பல் மருத்துவ படிப்புக்கு ஆயிரத்து 70 இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டில் 852 எம்.பி.பி.எஸ் இடங்களும், 690 பல் மருத்துவ இடங்களும் உள்ளன. இந்த ஆண்டு 59 ஆயிரத்து 785 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ தர வரிசை வெளியிடப்பட்டுள்ளது. 11 ஆயிரத்து 741 மாணவர்கள்,19 ஆயிரத்து 612 மாணவிகள் தர வரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடங்கி 13 ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.