முல்லைப் பெரியாறின் நீர்பிடிப்பு பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்ட தடை விதிக்கவும், ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றவும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனுதாக்கல் செய்துள்ளது.
முல்லைப் பெரியாறின் நீர்ப்பிடிப்பு பகுதியாக தேக்கடி ஆனைவாசல் உள்ளது. இப்பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கு கேரள அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வாகன நிறுத்தம் கட்ட இடைக்காலத் தடை விதித்தது.
வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கேரள மாநில அரசு மீண்டும் கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கு எதிரான இந்த கட்டுமானப் பணியை உடனே நிறுத்தவும், ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றவும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனுதாக்கல் செய்துள்ளது.