திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, கட்டுமானப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை தேர்தல் சமயத்தில் அளித்து, பின்வாசல் வழியாக ஆட்சியைப் பிடித்த விடியா திமுக அரசு, தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு கட்டுமானப் பொருள்களான சிமெண்ட் , கம்பி, செங்கல் , மணல் , மரம் போன்ற பொருள்களை அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் கொண்டு வந்து பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைத்திட வழி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு மூட்டை சிமெண்ட் 370 ரூபாய் இருந்த நிலையில் தற்போது 470 ரூபாய் வரை விற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அதேபோல 3 ஆயிரம் ரூபாய்க்கு விறபனை செய்யப்பட்ட ஒரு யூனிட் எம்.சாண்ட் தற்போது 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஒரு யூனிட் ஜல்லி, 3 ஆயிரத்து 800 ரூபாய் வரை உயர்ந்திருப்பதாகவும் கூறியுள்ளார். ஒரு டன் கம்பி 48 ஆயிரத்தில் இருந்து ஒரு சில மாதங்களில் 30 ஆயிரம் அதிகரித்து 78 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதையும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டி இருக்கிறார்.
திமுக ஆட்சிக்கு வந்த நில மாதங்களிலேயே ஒரு லோடு செங்கல் 11 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 28 ஆயிரம் ரூபாய்க்கு, 600 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லோடு கிராவல் மணல் பல மடங்கு உயர்ந்து 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பெயிண்ட்டின் விலையும் ஒரு லிட்டர் 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மற்ற மாநிலங்களைவிட தமிழ் நாட்டில் தான் அதிகளவில் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது என்றும் இருப்பினும் தமிழ்நாட்டில் சிமெண்ட் அதிகமான விலைக்கு விற்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுகவின் ஆறுமாத ஆட்சியில், சொந்த வீடு என்ற எண்ணம் வெறும் கானல் நீராக போகிவிட்டதாகவும், டீசல் விலை உயர்வினால் கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்லும் லாரி வாடகையும் உயர்ந்துள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட செய்தியின் விவரங்களை கேட்டு தெரிந்துகொள்ள
⬇⬇⬇ ⬇⬇⬇