சொத்து பிரச்னையில் மருமகனை கொல்ல சதி

திருப்பத்தூர் மாவட்டம் கந்தலி அருகே சொத்து பிரச்னையில் மருமகனை குடும்பத்துடன் வெடி வைத்து கொலை செய்ய முயன்ற மாமனார் போலீசில் சிக்காமல் இருக்க தலைமறைவாகி இருக்கிறார்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கொண்டநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரே தனது மருமகன் நரசிம்மனை குடும்பத்துடன் கொலை செய்ய முயற்சித்தவர் என கூறப்படுகிறது. கொண்டநாயக்கன்பட்டியைச் சேர்ந்த நரசிம்மன், அதே பகுதியை சேர்ந்த ராஜாவின் மகள் அனிதாவை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன், அனிதாவின் தந்தை ராஜா தனது சொத்தை விற்றுள்ளார். இந்த சொத்து அடுத்தடுத்து கை மாறிய நிலையில், பெரியசாமி என்பவரிடம் இருந்து, அதனை 45 லட்ச ரூபாய்க்கு நரசிம்மன் வாங்கி இருக்கிறார். தான் விற்ற சொத்தை மருமகனே வாங்கி விட்டார் என்பதை அறிந்தது முதல், சொத்தை தனது பெயருக்கு மாற்றித்தருமாறு நரசிம்மனை, ராஜா நச்சரித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு இருந்துவந்துள்ளது. இந்த நிலையில், மருமகனை குடும்பத்துடன் தீர்த்துக்கட்ட முடிவு செய்த ராஜா, தனது முதல் மனைவியின் மகன்களான யுவராஜ் மற்றும் கார்த்திக்கை வைத்து திட்டம் தீட்டி இருக்கிறார். அதன்படி பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகளை வாங்கி, நரசிம்மன் வீட்டின் சமையலறையின் மேல்வைத்து கட்டிவிட்டு 500 மீட்டர் தொலைவில் உள்ள மின்கம்பத்தில் ஒயர் மூலம் கனெக்ஷன் கொடுக்க பார்த்துள்ளனர். அப்போது விடியற்காலை 3 மணி அளவில் வீட்டின் வெளியே படுத்திருந்த சேட்டு என்பவர், சத்தம் கேட்டு வெளியே சென்று பார்த்தபோது கார்த்திக் மற்றும் யுவராஜ் சமையலறையில் நாட்டு வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு இருந்தனர். இதை பார்த்து சேட்டு சத்தம் போட்டதால், இருவரும் கீழே குதித்து தப்பி ஓடியுள்ளனர். அதன் பின்னர் ஒயரை துண்டித்து விட்டு இருவரையும் சேட்டு துரத்திச் சென்று உள்ளார். அப்போது 500 அடி தொலைவில் மின் கம்பத்தில் மாட்ட இருந்த ஒயரை துண்டித்து விட்டு கந்திலி போலீசாருக்கு சேட்டு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சமையலறையில் கட்டப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை பத்திரமாக மீட்டு, யுவராஜ் ,கார்த்திக் மற்றும் ராஜா ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

சொத்து பிரச்னை காரணமாக தன் சொந்த மருமகனையே மாமனார் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version