ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் ஒப்பந்தம் பெற்று தரமற்ற சாலைகளை அமைத்து வருவதாக காங்கிரஸ் பிரமுகர் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சாயல்குடியில் நான்காவது வார்டுக்கு உட்பட்ட அரண்மனை தெரு, அங்காள ஈஸ்வரி அம்மன் தெரு போன்ற பகுதிகளில் முறையான சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதியுற்று வந்தனர். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தர விட்டதன் பேரில், 49 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலைப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
புதிய சாலை அமைக்கும் ஒப்பந்தம் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வேலுச்சாமி என்பவருக்கு அளிக்கப்பட்டது. சாலை அமைக்க முதல்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முழுக்க லாப நோக்கத்தில், அவர் தரமற்ற சாலைகளை அமைத்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் அரசுக்கு கெட்ட பெயரை வேலுச்சாமி ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சாலை பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.