காங்கிரஸ் நினைத்திருந்தால் அயோத்தி பிரச்சனைக்கு முன்பே தீர்வு கண்டிருக்கலாம்: பிரதமர் மோடி

காங்கிரஸ் நினைத்திருந்தால் அயோத்தி பிரச்சனைக்கு முன்பே தீர்வு கண்டிருக்கலாம் என்றும், வாக்கு வங்கி அரசியலுக்காக அதை அவர்கள் விரும்பவில்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலச் சட்டமன்றத் தேர்தலையொட்டி டால்டன்கஞ்ச் என்னுமிடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, ஜார்க்கண்டில் இருந்து நக்சல்களை ஒழிக்கவும், அங்கு அமைதியான சூழலை உருவாக்கவும் பாடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். ஜார்க்கண்டில் அரசியல் நிலையின்மைக்குக் காரணம் நக்சல் ஆதிக்கமே எனவும் குறிப்பிட்டார். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற நல்லெண்ணம் நக்சலைட்களுக்கு இல்லை எனவும், அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற மட்டுமே நினைப்பதாகவும் மோடி குறிப்பிட்டார். வன்முறையான சூழல் நிலவுமிடத்தில் சாலைகள், தொழிற்சாலைகள், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை எப்படி அமைக்க முடியும் எனவும் மோடி கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் நினைத்திருந்தால் அயோத்தி பிரச்சனைக்கு முன்பே தீர்வு கண்டிருக்கலாம் எனவும், தனது வாக்கு வங்கி அரசியலுக்காக அதை அவர்கள் விரும்பவில்லை எனவும் மோடி குறிப்பிட்டார். காங்கிரசின் இத்தகைய போக்கு நாட்டின் வளர்ச்சியைப் பாதித்துள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.

Exit mobile version