பண மதிப்பிழப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்துகிறது.
மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. இது குறித்து நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, கறுப்பு பணம் ஒழிப்பு, லஞ்சத்தை ஒழித்தல், தீவிரவாதிகளிடம் பணம் சேர்வதை தடுத்தல் உள்பட பல்வேறு காரணங்களுக்காக இந்த கசப்பான மருந்து நாட்டு மக்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏராளமான சிறு குறு தொழில்கள் முடங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. திட்டமிடப்படாமல் மக்கள் மீது ஏவப்பட்ட ஏவுகணை என்று நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென் தெரிவித்தார்.
இந்தநிலையில், பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 2 ஆண்டு நிறைவடைந்த நிலையில், மத்திய அரசைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்துகிறது. மக்களிடம் பிரதமர் மோடி, மன்னிப்பு கேட்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தி உள்ளது.