டெல்லியில் பிப்ரவரி 8 ம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் , கடந்த முறையினை போலவே இந்த முறையும் காங்கிரஸ் பின்னடைவை சந்திக்கும் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், டெல்லி பேரவைத் தேர்தல் குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனமும் சி-வோட்டரும் இணைந்து ஜனவரி முதல் வாரத்தில் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவு வெளியாகியுள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பு 13,076 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பின் முடிவில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைத் தக்கவைக்கவுள்ளதாகத் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.இதன்படி, ஆம் ஆத்மி 54 முதல் 64 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம். பாஜக 3 முதல் 13 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம். காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் என கருத்து கணிப்பு கூறுகிறது.
இதன்மூலம், டெல்லி பேரவைத் தேர்தல் களம் ஆம் ஆத்மி மற்றும் பாஜகவுக்கு இடையிலான போட்டியாகவே உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், இந்தத் தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது. அதேசமயம், ஆம் ஆத்மியும் தனது ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கும் இது முக்கியமான தேர்தலாக உள்ளது.
2015-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 67 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிபிடத்தக்கது. இதன் மூலம் இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்திக்கும் என கருதப்படுகிறது..