காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று கோவையில் அதிமுக சார்பில் பிரசாரத்தில் ஈடுபட்ட சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் சி. மகேந்திரனை ஆதரித்து கிணத்துக்கடவு, வடசித்தூர், நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட சரத்குமார், கேரள மாநிலம் வயநாட்டில் கம்யூனிஸ்ட்டை எதிர்த்து போட்டியிடும் ராகுல்காந்தி, தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணியில் இருக்கிறார், இதுவே சந்தர்ப்பவாத கூட்டணி என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான் என்று குற்றம் சாட்டினார். அதேபோல, காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்தியிலும் கர்நாடக மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான் கபினி, சாரங்கி அணைகள் கட்டபட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தான் இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.