மக்களவை தேர்தலில் காங்கிரஸுக்கு திருநெல்வேலி தொகுதியை ஒதுக்காத, திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாவட்ட காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், திருநெல்வேலி மக்களவை தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது அந்த மாவட்ட காங்கிரஸார் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் காங்கிரஸார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வண்ணாரப்பேட்டையில் உள்ள செல்லபாண்டியன் பவனத்தில் இயங்கி வரும் காங்கிரஸ் அலுவலகத்தில் விவசாய அணி சார்பாக திமுகவுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் சம்பவ இடத்துக்கு வந்த பறக்கும் படையினர் எச்சரித்தனர்.
இதனையடுத்து மீண்டும் கட்சி அலுவலகத்துக்குள் சென்ற அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் போராட்டம் நடத்தியது திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.