ஊழலில் ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சிக்கு மத்திய அரசு மீது குறைகூறும் தகுதி இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாட்டை ஆள மத்திய அரசு தகுதி அற்றது என சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இரட்டை இலக்க பணவீக்கத்துடன் நாட்டின் பொருளாதாரம் இருந்ததாக குற்றம்சாட்டினார். ஆட்சிக் காலத்தில் விலைவாசிகளை கட்டுப்படுத்த தவறிய காங்கிரஸ் கட்சியினர் தற்போது மத்திய அரசை குறை கூறுவது வேடிக்கையாக இருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நிலக்கரி ஊழல், 2ஜி ஊழல் என பல ஊழல்களில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், ஊழலில் ஆட்சி நடத்தியதாக குற்றம்சாட்டினார். மேலும் காங்கிரஸ் கட்சி, மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.