பல்லடத்தில் ஒன்றிய துணைத்தலைவர் பதவியை திமுக பறித்ததால் காங்கிரஸ் அதிருப்தி

பல்லடம் ஒன்றியத்தில் துணைத்தலைவர் பதவியையும் திமுகவினர் பறித்துக் கொண்டதால் காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்தில் உள்ள 13 வார்டுகளில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தலா 5 இடங்களை பெற்றுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த தேன்மொழி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், துணைத் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு அளிப்பதாக திமுகவினர் தெரிவித்து இருந்தனர். ஆனால், காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்றுள்ள 2 கவுன்சிலர்களில், யாரை துணைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டதால், திமுகவை சேர்ந்த பாலசுப்பிரமணியம் போட்டியின்றி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலை புறக்கணித்தனர். திமுகவினரின் இந்த செயல் காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதேபோல் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தேர்தல் அதிகாரிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. மறைமுக தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது, திமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உட்பட திமுக கவுன்சிலர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தேர்தலை ஒத்தி வைத்த தேர்தல் அதிகாரிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் திமுகவினர் ஆம்புலன்ஸிற்கு வழிவிடாமல் தொடர்ந்து ஆராஜகத்தில் ஈடுபட்டனர். பின்னர், 1 மணிநேரத்திற்கு பிறகே ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடப்பட்டது. திமுகவினரின் இந்த செயல் பொதுமக்களிடையே அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. 

Exit mobile version