மத்திய பிரதேசத்தில் 281 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் காங்கிரசுக்கு தொடர்பு இருப்பதாகவும், இது காங்கிரசின் டிரைலர் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். குஜராத்தின் ஜுனாகாத் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ஏழை குழந்தைகளின் வாயில் உள்ள உணவை பறித்து தங்கள் தலைவர்களின் வயிற்றை காங்கிரஸ் நிரப்பிக்கொள்வதாக சாடினார்.
பணத்தை கொள்ளையடிக்கவே காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர நினைப்பதாக குற்றம் சாட்டிய மோடி, ஆட்சிக்கு வந்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதற்கு மத்திய பிரதேசமே உதாரணம் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து சோன்காத் பகுதியில் உரையாற்றிய பிரதமர் மோடி, காஷ்மீரின் தற்போதைய பிரச்சனைக்கு முன்னாள் பிரதமர் நேருவே காரணம் என்றும் விமர்சித்தார். சர்தார் வல்லபாய் பட்டேலின் கருத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சர்தார் வல்லபாய் பட்டேல், மோராஜி தேசாய் ஆகியோரை தொடர்ந்து குஜராத்தின் மைந்தனான தனக்கும் காங்கிரஸ் தொல்லைகள் தருவதாகவும் மோடி கூறினார்.