சத்தீஷ்கரில் தேர்தல் நடைபெறும் நாளில் பிரதமர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், தேர்தல் ஆணையத்தை விமர்சித்துள்ளது.
2003ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை சத்தீஷ்கரில் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. அங்கு ராமன் சிங் முதலமைச்சராக ஆட்சி செய்து வருகிறார். பதவிக்காலம் முடிவுற்ற நிலையில், சட்டப் பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு முதல்கட்டமாக 18 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூரில், பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். தேர்தல் நடைபெறும் ஒரு மாநிலத்தில் பிரதமர் பிரச்சாரத்தில் ஈடுபடுவது அபத்தமானது என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேர்தல் நாளன்று பிரச்சாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் பிரதமரை அனுமதிப்பது தவறானது என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.