17வது மக்களவை தேர்தலை வெற்றிகரமாக நடத்திய தேர்தல் ஆணையத்திற்கு வாழ்த்து

17வது மக்களவை தேர்தலை சிறப்பான முறையில் அமைதியாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்துக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரை ஆற்றினார். இதில் பங்கேற்க வந்த அவருக்கு குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்யா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ராம்நாத் கோவிந்த் தனது உரையை ஆற்றினார். 2019 தேர்தலில் அதிகமான பெண் வாக்காளர்களும், புதிய வாக்காளர்களும் வாக்களித்து குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர் மக்களவை தேர்தலை வெற்றிகரமாக நடத்திய தேர்தல் ஆணையத்திற்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.

நாடாளுமன்றத்தில் வெவ்வேறு தொழில் அனுபவங்களுடன் புதிய எம்.பி.க்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டார். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்ந்து மக்கள் தெளிவான முடிவை வழங்கியுள்ளதாக குடியரசு தலைவர் கூறினார். மோடி தலைமையிலான அமைச்சரவை புதிய இந்தியாவை முன்னோக்கி செல்ல உதவும் என்றும், கடைசி மனிதனுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version