உலகமெங்கும் அன்னை தெரசா பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவுட்டுள்ள முதலமைச்சர், “கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும்தான் தாயாக முடியும், ஆனால், கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்கு தாயாக முடியும் என வாழ்ந்து காட்டிய அன்னை தெரசா பிறந்தநாளில், வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். அவரது சேவை மற்றும் தியாகங்களால், அவர் மீது பேரன்பு கொண்டிருந்தவர் புரட்சித்தலைவி அம்மா என்பதில் பெருமை கொள்வதாகவும், முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அன்னை தெரசா பிறந்தநாளில் அவரது வழியில் அன்பை மட்டும் விதைப்போம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஆதரவற்றவர்கள், தொழுநோயாளிகளுக்கு அன்புடன் பணிவிடை செய்து, அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை உருவாக்கியவர் அன்னை தெரசா என புகழ்ந்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாசத்திற்குரியவருமான அன்பின் புனிதர் அன்னை தெரசா மண்ணில் அவதரித்த இந்நாளில், அவர் வழியில் அன்பை மட்டுமே விதைப்போம் என துணை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நாமாக இருப்போம் எனவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளார்.